நடிகர் கமல்ஹாசனின் கார் ஷெட்டில் சமீபத்தில் புதிய வரவு ஒன்று இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை வாங்கி தனது கார் ஷெட்டுக்கு மேலும் அழகூட்டியுள்ளார் கமல்.
உலக நாயகன் கமல்ஹாசன் ஓர் வாகன பிரியர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும், அவரது கார் ஷெட்டில் ஆடி முதல் டொயோட்டோ வரை ஏராளமான நிறுவனங்களின் கார்கள் அணி வகுத்து நிற்கும். புது கார்களை வாங்கும்போது பழைய கார்களை விற்காமல் அதை சிறப்பாக பாதுகாத்து, பராமரித்து வருகிறார் கமல்.
இந்த நிலையில், அவரது கார் ஷெட்டை அலங்கரிக்க மேலும் ஒரு புதிய வரவு இணைந்துகொண்டுள்ளது. ஆம், கடந்த ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்டன் பிராண்டு காரான புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வாங்கியுள்ளார்.
வெள்ளை நிறம்தான் கமலின் மனதை கொள்ளை கொண்ட நிறம் என்பதால் சமீபத்தில் வாங்கிய ரேஞ்ச் ரோவர் இவோக்குடன் சென்னையை வலம் வருகிறார் கமல். பெர்ஃபார்மென்ஸ், சொகுசு என அடுத்த தலைமுறைக்கான அம்சங்களுடன் கூடிய இவோக் எஸ்யூவி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முதல் லாட் விற்று காலியானது நினைவிருக்கலாம்.
ரேஞ்ச் ரோவர் இவோக்குக்கு முன்னதாக நடிகர் கமல் வெள்ளை நிற டொயோட்டோ பிராடோ காரை பயன்படு்த்தி வந்தார். மேலும், கடந்த ஆண்டு மார்ச்சில் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம் செய்யப்பட்டவுடன் முதல் ஆளாக போய் அவர் வாங்கினார் என்பதும் கார்கள் மீது அவருக்கு எந்தளவுக்கு காதல் இருக்கிறது என்பதை பல்ஸ் பிடித்து பார்க்காமலே கூறிவிடலாம்.
இவோக் எஸ்யூவி ரூ.44.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது