'விஸ்வரூபம்' படத்தினை அடுத்து கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கமல் இயக்கி நடித்த 'தசாவதாரம்' படத்தினை தயாரித்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அடுத்து அவர் தயாரிக்க இருக்கும் படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இரு மொழிகளில் வெளியாக இருக்கும் அப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கேத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
ரஜினியின் ' கோச்சடையான் ' படத்திற்காக தனது கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க திட்டிமிட்டு வருகிறார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரினா கைஃப்.
இந்நிலையில் கமல் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணையும் படத்தில் நாயகி வேடத்திற்கும் கத்ரீனாவிடம் பேசி வருகிறார்கள். கேத்ரினா மட்டுமன்றி படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறாராம்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் " எல்லாம் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன.. கேத்ரினாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எதுவும் இன்னும் முடிவாகவில்லை." என்று தெரிவித்துள்ளார்.