கமல் 'விஸ்வரூபம்' படத்தில் நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்குகிறார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. கதாநாயகியாக சோனாக்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இப்படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. திடீரென்று அவர் நீக்கப்பட்டு கமலஹாசனே டைரக்டு செய்கிறார்.
படம் பற்றி கமல் அளித்த பேட்டி வருமாறு:-
விஸ்வரூபம் படம் தமிழ், இந்தியில் நேரடி படமாக தயாராகிறது. இப்படத்தில் நடிக்க நானும் சோனாக்சி சின்காவும் தேதி ஒதுக்கி இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி துவக்கப்படாமல் எங்கள் கால்ஷீட் வீணானது. எனக்கு நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. அதனால்தான் பிறந்தநாளை கூட கொண்டாடுவது இல்லை. எனவேதான் நானே படத்தை இயக்குகிறேன்.
இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தசாவதாரம், ஹேராம் போன்ற எனது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டன. ஆனால் இந்தி வசன உச்சரிப்புகள் அவற்றில் சரியாக பொருந்தவில்லை. எனவேதான் 'விஸ்வரூபம்' படத்தை இரு மொழிகளிலும் நேரடியாக எடுக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது. இன்னும் நடிப்பில் சலிப்பு வரவில்லையா? என்று கேட்கிறார்கள்.
பணம், புகழுக்காக நடிக்க வந்து இருந்தால் 25 வருடங்களுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கேமிரா முன் நிற்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. எனவேதான் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறேன். என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு கமல் கூறினார்