அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் அன்னையும் நீயே…
என்ற பாடலை கண்ணீர் மல்க முருகனை பார்த்து பாடும் குழந்தையை பார்க்கும் எவரும் ஒரு கணம் அவர்களை மறந்து அந்த பாடலில் லயித்து விடுவர். சுட்டிக்குழந்தையாய் முகத்தில் அத்தனை பாவங்களையும் தேக்கி தன் வேண்டுதலை முருகனிடம் தெரிவித்த அந்த குழந்தைதான் உலகநாயகனாய் இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ள 'நாத்திகர்' கமல்ஹாசன்.
ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்டவர்
குழந்தையாய் அறிமுகமான படத்திலேயே அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். காதல் இளவரசனாகி இளசுகளின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இன்றைக்கு காலத்தை வென்ற நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தமிழரின் பெருமையை இந்தியா முழுவதும் பறைசாற்றிய முதல் தமிழர் அவர்.
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள் மூலம் மக்களை சென்றடையச்செய்தவர் இவர். களத்தூர் கண்ணம்மா தொடங்கி மன்மதன் அம்பு வரை கமல்ஹாசன் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் ஒரு சரித்திரத்தை உள்ளடக்கியிருக்கும்.
விருதுக்கு விருது கிடைத்த பெருமை
குழந்தையாக அறிமுகமான படத்திலேயே அற்புதமான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருது பெற்றார். பின்னர் மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் என மூன்று படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தவர் கமல்.
பதினெட்டுமுறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்தவர். எனக்கு இனி விருதே வேண்டாம் என்று எழுதிக் கோரியவர். பல மாநில அரசுகளின் விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். விருதுகளுக்கு புது அர்த்தமும், பெருமையும் பெற்றுத் தந்தவர் உலக மகாநாயகன் கமல்ஹாசன்.
நற்பணி செய்ய மன்றம்
விசிலடிக்கவும், பாலபிஷேகம் செய்யவும் மட்டும்தான் ரசிகர்கள் என்றிருந்த நிலையை மாற்றி ரசிகர்கர்களை நற்பணி செய்யத் தூண்டினார். அதற்கு தலைவராக தாமே இருந்து ரசிகர்களை நல்வழி நடத்துகிறார். ரசிகர்களை நற்பணி நாயகர்களாக திருப்பிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.
நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரும் இரத்ததானம் செய்ய வைத்த நடிகர். இன்றைக்கு இந்தியாவிலேயே ரத்ததானம் செய்யும் திரை ரசிகர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் கமல் ரசிகர்கள் மட்டுமே.
இன்று கமல்ஹாசன் பிறந்த நாள். 1960 களில் தொடங்கிய உலகநாயகனின் கலைப்பயணம் 2011 வரை 50 ஆண்டுகளையும் கடந்து நீடிப்பதற்கு அவரது தீராத கலை தாகம்தான். உலகநாயகன் என்ற பெருமையோடு தமிழன் என்ற பெருமிதத்தோடு நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவோம்.