Sunday, 1 April 2012

ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்- யார் புத்திசாலிகள்?

,
 
 
 
அட போங்கப்பா, ரசிகர்களாக இருப்பதே ஒரு முட்டாள்தனம், அதுல அந்த ரஜினி,கமல்-னு பெரிய வித்தியாசம் வேற அப்படினு நீங்க கடுப்பாகக்கூடும்.
 
உண்மையில் நம் மனதை உள்நோக்கி பார்த்தால் நாம் சந்தித்த மனிதர்களின், நம்மை ஈர்த்த மனிதர்களின் தாக்கம், ஆழ்மனதில் இருக்கக்கூடும். அதன் பாதிப்பாக நம் நடவடிக்கைகளில் ஒரு சில மேனரிஸங்களும் நம்மை அறியாமல் வெளிப்படக்கூடும். ஆழ்ந்து கவனித்தால் அது யாரோ ஒருவரிடமிருந்து நாம் ரசித்த விஷயமாக இருக்கும்.
 
புராணக்கதை கேட்ட காலங்களில் அதன் கதை மாந்தர்களை ரசித்தவர்கள் இப்போது சினிமா கதாநாயன்-களுள் மூழ்கி இருப்பதனை காலக்கொடுமை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர யதார்த்தம் இதுதான்.
 
முன்பு புத்தக வாசிப்பு அதிகம் இருந்த காலத்தில், தன்னை வந்தியதேவனாகவும், அரவிந்தனாவும் வரிந்து கொண்டவர்கள், சினிமாவின் தாக்கம் அதிகரித்த பின் தன்னை சிவாஜியாகவும், எம்.ஜி.ஆராகவும் பாவித்துக்கொண்டார்கள்.இன்று ரஜினி, கமல் என்னும் பிம்பங்களை தாண்டி, அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறார்கள்.
 
நான் யாருடைய ரசிகனும் இல்லை என்று காட்டிக்கொள்பவர்களின் மனதிலும் தான் ரசித்த யாரோ ஒருவரின் பிம்பம் ஒளிந்திருக்கும் என்பது தான் உண்மை.

தமிழ் சினிமாவில் எப்போதும் ஈர்ப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் தாக்கமும், நடிப்பு அடிப்படையில் ஒரு நடிகரின் ஏற்றமும் இருக்கும்.
 
எம்.ஜி.ஆர். ஈர்ப்பு வகை. சிவாஜி நடிப்பு வகை.
 
ரஜினியை பொறுத்தவரை ஈர்ப்பு அடிப்படையிலான ரசிகர்கள் தான் ஏராளம். அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வகையில் ரஜினியின் கவர்ச்சி எடுபட்டிருப்பதை பார்க்கலாம். இப்போது இணையத்தில் அதிக அளவில் ரஜினி ரசிகர்கள் குவிந்திருப்பதற்கான காரணமும், முன்பு சிறுவர்களாக இருந்தவர்களை ரஜினி கவர்ந்தது தான்.
 
கமலை பொறுத்தவரை நடிப்பு மூலம் ரசிகர்களை ஈர்த்தது தான் அதிகம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் கமல் ரசிகர் என்ற அடையாளத்தையே கொண்டிருக்கிறார்கள்.
 
சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் கமல் தெரிந்து வைத்திருப்பது கூட இதற்கு காரணமாக இருக்கிறது. அனந்து முதல் வையாபுரி வரை அத்துணை சினிமா மனிதர்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்வதுடன், அவர்களையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்துவது கமலினை (மேல்தட்டு) ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
 
சில பல காரணங்களால் சிவப்பாக இருக்கும் கமலை விட, ரஜினிக்கு அதிகமான பெண்களின் ஈர்ப்பை பெற்றியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம், கேமராவை பார்த்து பஞ்ச் பேசுவது இதெல்லாம் ரஜினிக்கே கைவந்த ரசிகர்களை ஈர்ப்பதற்க்கான வித்தை.
 
படம் வெளியாகும் சமயத்தில் எல்லாம் அரசியல் வருவதாக பேசுவது கூட,ரசிகர்களை தக்கவைக்க ரஜினி மேற்கொள்ளும் "சினிமா அரசியல்" தந்திரம் தான் என்பது இன்றும் உயிருடன் இருக்கும் குற்றச்சாட்டுதான்.
 
ஆனால் ரஜினி அளவு ரசிகர்களின் ஈர்ப்பை இனி ஒரு நடிகர் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.இப்போது கூட ரஜினியின் ரோபோ படவியாபாரம் பார்த்து திகைத்து போய் கிடக்கிறது இந்திய திரையுலகம்.
 
ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள் கூட, தங்களின் சொந்த பணத்தை போட்டுதான் கோலாகலம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் தலைமுறையை தாண்டி வரும்போது, இனி வரும் காலங்களில் இந்த கூத்துக்களும் ஒரு முடிவினை அடையும் என்று நம்பலாம்.
 
இனி ரசிகர் மன்றங்கள் தீண்டதகாததாக மாறிவிடும் சூழ்நிலையும் விரைவில் வரும், அதற்கு ஈடாக இணைய ரசிகர் மன்றங்கள் உருவாகக்கூடும்.
 
ரசிகர் மன்றம் நடிகர்களுக்கு கூடாரம்;
குடும்பங்களுக்கு சேதாரம்.
டிஸ்கி:
இது ஒரு மீள்பதிவு.

டிரைலர் டைம்ஸ்:

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய ஈர்ப்பியல் விதிகள் - விரைவில்...
 
 

0 comments to “ரஜினி ரசிகர்கள் , கமல் ரசிகர்கள்- யார் புத்திசாலிகள்?”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates