Tuesday 29 November 2011

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...

,
 
 
 
சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.
 
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.
 
இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.
 
இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
 
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.
 
கே பி இயக்கத்தில் நாடகம்
 
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
 
பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.
 
மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.
 
தமிழக அரசிடம் நிதி கேட்போம்
 
சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.
 
கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.
 
பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.



0 comments to “பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்...”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates